×

திமுக வடக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்

திருப்பூர், ஆக.17: திமுக திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில், ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் செல்வராஜ் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, இளைஞரணி சார்பில் நடத்தப்பட உள்ள பேச்சுப்போட்டிக்கு திராவிட கொள்கைகள் சார்ந்த தலைப்புகள், நடைபெறும் இடம் மற்றும் தேதி போன்றவற்றை இம்மாத இறுதிக்குள் தேர்வு செய்து தலைமை கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.அண்ணா பிறந்தநாள் அன்று அனைத்து மாவட்டத்திலும் கலைஞர் படிப்பகங்களுக்கான திறப்பு விழாவினை டிசம்பர் மாதத்திற்குள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அணியினர், மாவட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணியினரை கொண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சமூக வலைதளங்களில், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு மற்றும் சிறப்பு அம்சங்களை ‘ரீல்ஸ்’ ஆக பதிவு செய்திட வேண்டும்.மாணவர் அணியினர், அனைத்து பள்ளி, கல்லூரி அளவில் கவியரங்கம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவதற்கான தலைப்புகளை தேர்வு செய்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு போட்டி குறித்து அரசு சார்பில் சுற்றறிக்கையை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் அனுப்ப வேண்டும். மகளிர் அணி சார்பில் நடைபெறும் அகில இந்திய அளவிலான பெண் தலைவர்களின் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கம் தொடர்பான தகவல்களை பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். மகளிர் தொண்டர் அணியினர், மண்டல வாரியாக மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் திருநங்கைகள்-மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும். நெசவாளர் அணியினர், 5 மண்டலத்திலும் நெசவாளர்களின் கை வண்ணத்தில் நெசவு செய்த ெபாருட்களை வைத்து நெசவாளர் விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை நவம்பர் மாதத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கழக மீனவர் அணியின் சார்பில், மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மீன் வியாபாரிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு இலட்சிணை பதிக்கப்பட்ட ஐஸ் பெட்டிகள், நிழற்குடைகள் மற்றும் மீன் வெட்டுபவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்றவற்றை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாக நடத்திட வேண்டும்.

அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் அணியினர், அனைத்து நகரம், பேரூர், ஒன்றியம் மற்றும் மாநகரங்களில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் பெயர் பலகை நிறுவ வேண்டும். ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமை பிரிவினர் சார்பில், நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் உள்ளூர் இஸ்லாமிய, கிறிஸ்துவ மத போதகர்களை கொண்டு கலைஞரின் சாதனைகளை விளக்குவதன் மூலம், கழகத்தின் சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு நிகழ்ச்சியினை அமைத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், மாநகர செயலாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக வடக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : northern district ,disgagam ,Tiruppur ,Thiruppur Northern District ,Artist Century Festival ,Kazhagam Northern District ,
× RELATED திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!